23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா? திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்


23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா? திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 7:51 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக திருநாவுக்கரசர் களம் இறங்குகிறார். 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திருச்சி,

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தேசிய கட்சியான காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். திருச்சியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது? என பல இழுபறி மற்றும் போட்டிகளுக்கு இடையே இறுதியாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டுள்ளார். திருநாவுக்கரசர் அரசியலில் அனைவருக்கும் பரீட்சயமானவராக இருந்தாலும், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு புதியவர் என்றே சொல்லலாம். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக திருச்சி தொகுதியில் அவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கோஷ்டிகளுக்கு பஞ்சம் இல்லை. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம், தங்கபாலு மற்றும் திருநாவுக்கரசர் என ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால், உட்கட்சி பூசலால், திருநாவுக்கரசரால் அவர்களை ஒருங்கிணைத்து தேர்தலில் செயல்பட வைக்க முடியுமா? என்பது தெரியவில்லை. அத்துடன் உள்ளூரில் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிசும், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். காங்கிரசாரில் பலர் ஜோசப் லூயிஸ்தான் வேட்பாளர் என பேசப்பட்டு வந்த நிலையில் திருநாவுக்கரசருக்கு ‘சீட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா என பல்வேறு கட்சிகள் களம் கண்டு வென்றுள்ளன.

இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடைக்கலராஜ் 4 முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியை அ.தி.மு.க. தன் வசம் வைத்திருந்தது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1952-ம் ஆண்டு முதல் முதலாக காங்கிரஸ் கட்சி சார்பில் அப்துல் சலாம் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து திருச்சி தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சிகளே வென்று வந்தன. 1984-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற அடைக்கலராஜ் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1996-ம் ஆண்டு 4-வது முறையாக மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காங்கிரஸ் கட்சி திருச்சி தொகுதியில் களம் காண்கிறது. திருநாவுக்கரசர் ‘கை’ ஓங்குமா? என்பது அவரது தேர்தல் பிரசார யுக்தியை பொறுத்தே அமையும்.

திருச்சி தொகுதியில் போட்டியிடும் திருநாவுக்கரசருக்கு வயது 70. புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். முதுகலையில் எம்.ஏ மற்றும் சட்ட இளங்கலையில் பி.எல். படித்தவர். அ.தி.மு.க.வில் 1977-ம் ஆண்டு முதல் 1991 வரை இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதன் பின்னர், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை தாயக மறுமலர்ச்சி கழகத்தில் இருந்தார். மீண்டும் 1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வெளியேறி எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என சொந்தமாக கட்சி தொடங்கி நடத்தி வந்தார். 2 ஆண்டுகள் கழிந்த நிலையில், அக்கட்சியை கலைத்து விட்டு 2002-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றினார். அங்கு அவருக்கு தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் திருநாவுக்கரசர் கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணை மந்திரியாக இருந்தார்.

2009-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டது. தேர்தல் குழு பணி அவருக்கு ஒதுக்கப்பட்டது.

1977-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். 1977-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டுவரை துணை சபாநாயகராகவும், 1980 முதல் 1987-ம் ஆண்டுவரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர்.

பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த பின்னர் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். திருநாவுக்கரசருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். 

Next Story