புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்க நோட்டாவிற்கு வாக்களிக்க கோரி சமூகநல பேரவையினர் பிரசாரம்


புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்க நோட்டாவிற்கு வாக்களிக்க கோரி சமூகநல பேரவையினர் பிரசாரம்
x
தினத்தந்தி 23 March 2019 10:45 PM GMT (Updated: 23 March 2019 8:20 PM GMT)

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்க நோட்டாவிற்கு வாக்களிக்க கோரி அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநல பேரவையினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, குளத்தூர், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த தொகுதி கடந்த 2009-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் நீக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியுடனும் இணைக்கப்பட்டது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் 4 நாடாளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தொகுதி மீட்பு குழு தொடங்கப்பட்டது. கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நோட்டாவிற்கு வாக்களிப்பதற்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 13 ஆயிரத்து 500 வாக்குகளும், 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 50 ஆயிரத்து 600 வாக்குகளும் நோட்டாவிற்கு பொதுமக்கள் வாக்களித்தனர். இதனால் தேர்தல் ஆணையம் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி அடைந்தது.

கடந்த 2 தேர்தல்களில் ஒரு சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களித்ததால் தங்களுடைய வெற்றி வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தொகுதியை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இளைஞர் அமைப்புகள், அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநல பேரவை உள்ளிட்ட அமைப்புகள் பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதுக்குளம், சின்னப்பா பூங்கா, புதிய பஸ் நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் அகில இந்திய மகாத்மாகாந்தி சமூகநல பேரவை நிறுவனர் தினகரன் தலைமையில் நோட்டாவிற்கு வாக்களிக்க கோரி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநல பேரவை நிறுவனர் தினகரன் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி அரசியல் காரணத்தால் பறிக்கப்பட்டு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், திருச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளோடு இணைக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் எந்த பயனையும் புதுக்கோட்டை அடையவில்லை. புதுக்கோட்டைக்கு என எம்.பி. இல்லாததால் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், புதிய ரெயில் பாதை அமைத்தல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு போன்ற மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம் கேட்டு பெற்று நிறைவேற்ற முடியவில்லை. எனவே மீண்டும் தொகுதி மறுவரையறை செய்து புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும் எனக்கோரி வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் நோட்டாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளோம். இந்த தேர்தலில் நோட்டாவுக்கு அரசியல் கட்சிகளை காட்டிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story