விருதுநகர் நாடாளுமன்ற, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் நடைபெறும் கலெக்டர் சிவஞானம் தகவல்


விருதுநகர் நாடாளுமன்ற, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் நடைபெறும் கலெக்டர் சிவஞானம் தகவல்
x
தினத்தந்தி 24 March 2019 4:00 AM IST (Updated: 24 March 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் நடைபெறும் என கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் நிருபர்களிடம் கூறியதாவது:–

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவும், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 18–ந்தேதி நடக்கிறது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் வாக்குப்பதிவு தினத்தன்று மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் அந்த இரு தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும். எனவே இந்த நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும்.

இதேபோன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குபதிவு முடிந்தவுடன் அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரிக்கு கொண்டு வரப்படும். அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள 2 மையங்களிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாக்குப்பதிவு தினத்தன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயர்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள செயலியை பயன்படுத்தி தங்களது வாக்களர் அடையாள அட்டை எண்களை பதிவு ஏற்றம் செய்யலாம். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குசாவடி எண்ணையும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை நகலையும், தேசிய அடையாள அட்டை நகலையும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story