ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து சாவு போலீசார் தாக்கியதால் உயிரை மாய்த்து கொண்டதாக உறவினர்கள் புகார்


ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து சாவு போலீசார் தாக்கியதால் உயிரை மாய்த்து கொண்டதாக உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 8:33 PM GMT)

அஞ்சுகிராமம் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தாக்கியதால் அவர் உயிரை மாய்த்து கொண்டதாக உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே உள்ள புதுக்குளம் ஜேம்ஸ் டவுனை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 46), ஆட்டோ டிரைவர். இவருக்கு விஜயரூபா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். விஜயரூபா, அஞ்சுகிராமம் பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு தடுப்பு தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். ராமச்சந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன் விஜயரூபா தன் கணவர் ராமச்சந்திரனை பிரிந்து சென்று விட்டார். தற்போது அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராமச்சந்திரனின் மூத்த மகளுக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தன் மகளுக்கு புதுத்துணிகள் வாங்கிக் கொண்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக மனைவியின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் விஜயரூபா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ராமச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பினர். இதனையடுத்து ராமச்சந்திரன் நேற்று முன்தினம் விஷம் குடித்த நிலையில் வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமச்சந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் போலீஸ் தாக்கியதால் தான் ராமச்சந்திரன் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி ராமச்சந்திரனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “ராமச்சந்திரன் மீது அவருடைய மனைவி பொய் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை தாக்கியுள்ளனர். இதுபற்றி ராமச்சந்திரன் அவரது டைரியில் குறிப்பு எழுதி வைத்துள்ளார். ஆனால் அந்த டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். போலீஸ் தாக்கியதால் தான் ராமச்சந்திரன் தற்கொலை செய்துள்ளார். எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story