பா.ஜனதாவில் அத்வானிக்கு கட்டாய ஓய்வு : பா.ஜனதா மீது சிவசேனா தாக்கு
நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் பா.ஜனதாவில் அத்வானிக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அத்வானிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது தொகுதியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா களம் இறங்குகிறார்.
இதனை பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ வில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா கட்சி தலைவர் அத்வானி இந்திய அரசியலின் பீமாச்சாரியார் என அறியப்பட்டவர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இருப்பினும் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
பா.ஜனதாவில் அத்வானியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அத்வானி குஜராத் காந்திநகர் தொகுதியில் 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அமித்ஷா அவரது தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் உள்அர்த்தம் என்னவென்றால் அத்வானிக்கு வலுக்கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அத்வானி பா.ஜனதா கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து கட்சியின் ரதத்தை முன்னேற்ற பாதையில் செலுத்தியவர். ஆனால் வாஜ்பாய் மற்றும் அத்வானியின் இடத்தை தற்போது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கைப்பற்றிக்கொண்டனர்.
அத்வானி அரசியலில் நீண்ட இன்னிங்சை விளையாடிவிட்டார். அவர் பா.ஜனதாவின் ஒரு உயர்ந்த தலைவராக எப்போதும் இருப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story