செல்போன் செயலி மூலம் அச்சமின்றி தகவல் கொடுக்கலாம் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று கலெக்டர் உறுதி
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கினால் பொதுமக்கள் செல்போன் செயலி மூலம் அச்சமின்றி தகவல் கொடுக்கலாம் என்றும், தகவல் கொடுப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி,
இதுகுறித்து தேனி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
‘சிவிஜில்’ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் தகவல்களை அனுப்புவது மிகவும் எளிமையான நடைமுறை தான். இந்த செயலி மூலம் புகைப்படம், வீடியோ தகவல்களை அனுப்பலாம். பொதுமக்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்தவாறே நேரடியாக காணும் தேர்தல் விதிமீறல்கள், பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் நபர்களின் விவரங்கள் முழுவதும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
தகவல்கள் கொடுப்பவர்கள் தங்களை பற்றிய முழு விவரங்களை தெரிவிக்காமல், விதிமீறல்கள் குறித்த தகவல்களை கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயலிக்கு இதுவரை குறைந்த அளவில் புகார்களே வந்துள்ளன. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மகளிர் குழுக்களுக்கு இந்த செயலி குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் தகவல் மையத்துக்கு 1950 என்ற எண்ணிலும், 18004256821 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியல் விவரம், வாக்குச்சாவடி விவரம் உள்பட தேர்தல் தொடர்பாக தகவல்களையும் பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story