‘தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது’ திருப்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது’ திருப்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 24 March 2019 3:10 AM IST (Updated: 24 March 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

‘தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது’ என்று திருப்பத்தூரில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருப்பத்தூர்,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் தர்மபுரியில் இருந்து கார் மூலமாக நேற்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு வருகை தந்தார்.

பின்னர் அங்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திருப்பத்தூர் அவுசிங்போர்டு, சேலம் கூட்ரோடு, பஸ் நிலையம் மற்றும் ஆசிரியர் நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தல் முக்கியமான தேர்தல். மத்தியிலே நிலையான ஆட்சி அமைய வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் ‘மெகா’ கூட்டணி அமைத்து இருக்கிறோம். தி.மு.க.வும் ஒரு கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவரை பிரதமராக முன்மொழிந்து கொண்டு இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வைத்து ராகுல்காந்தியை பிரதமர் என்று சொல்கிறார். மேற்குவங்கத்திற்கு சென்ற போது, தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை தேர்வு செய்வோம் என சொல்கிறார். அவர்களின் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும் வெற்றி பெற்ற கூட்டணி தான் நம்முடைய கூட்டணி. எதிர்வரிசை கூட்டணி பூஜ்ஜியம் தான். ஆகவே நம்முடைய கூட்டணி தான் உங்கள் ஆதரவில் மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி கொடுத்தார்கள். தி.மு.க.வும் வாக்குறுதி கொடுத்தார்கள். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என கூறினார்கள். ஆனால் யாருக்காவது கொடுத்தார்களா? அவர்களே பட்டா போட்டு கொண்டார்கள். பொய்யான வாக்குறுதி கொடுத்து தேர்தலில் நாடகமாடினார்கள்.

அதேபோல், இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் அதை செய்வோம் இதை செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது. வாக்குகளை பெறுவதற்கு நாடகமாடுகிறார்கள். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படுகிற தேர்தல் அறிக்கை. முத்து முத்தான அறிக்கை. அந்த திட்டங்கள் முழுவதும் நிறைவேற்றப்படும்.

தி.மு.க. 15 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். இந்த தொகுதிக்கு ஏதாவது செய்தார்களா? ஏதாவது புதிய தொழிற்சாலை கொண்டு வந்தார்களா? திட்டங்கள் கொண்டு வந்தார்களா? தமிழகத்திற்கு தேவையான நிதி பெற்று தந்தார்களா?. ஆனால் அ.தி.மு.க.வுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை அந்த வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று எம்.பி.யாக வரும் போது, இந்த தொகுதி வளம் பெறும். மத்தியிலே தேவையான நிதி பெற்று தமிழகம் வீறுநடை போடும். தி.மு.க. வந்தால் குடும்ப உறுப்பினர்கள் தான் மந்திரியாக வர முடியும். அ.தி.மு.க. மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு சேவை செய்ய கூடிய கட்சிகள்.

இந்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை பெற்று தாருங்கள். கடந்த தேர்தலில் மின்வெட்டினை சரிசெய்கிறோம் என தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறினார். அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டை சரிசெய்து, தடையில்லா மின்சாரம் வழங்கினார். இப்போதும் ஜெயலலிதா வழியில் நடக்கும் அரசும் மின்வெட்டு இல்லாமல் மின்சாரத்தை வழங்கி வருகிறோம். மேலும் உபரி மின்சாரத்தை நாம் தயாரித்து கொண்டிருக்கிறோம்.

கட்ட பஞ்சாயத்து, ரவுடி ராஜ்ஜியம் கிடையாது. சட்டம், ஒழுங்கு நல்ல முறையில் கடைபிடிக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் அந்த மாநிலம் வளர்ச்சி அடையும். புதிய புதிய தொழிற்சாலைகள் வரும். இன்று தமிழகத்துக்கு பல முதலீட்டாளர்கள் வருகிறார்கள். அண்மையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். தமிழகத்தில் ரூ.3 லட்சத்து 304 கோடி முதலீடு செய்ய அவர்கள் ஒப்பந்தம் போட்டார்கள். அந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. அதனால் 10½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஏரி, குளங்களில் இருக்கிற வண்டல் மண் எல்லாம் விவசாயிகளுக்கு இலவசமாக அள்ள அனுமதி அளிக்கிறோம். அவ்வாறு அள்ளும்போது, ஏரி ஆழமாகும். பருவ காலங்களில் பெய்யும் மழைநீர் முழுவதும் சேகரித்து வைக்க முடிகிறது. விவசாயத்திற்கு தேவையான நீரை முழுமையாக சேமித்து வைப்பதற்கு முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு குடிமராமத்து என்ற திட்டத்தை தொடங்கி, இதுவரை 2,500 ஏரிகள் தூர்வாரப்பட்டு இருக்கிறது.

ஓடைகள், நதியின் குறுக்கே பருவ காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. ஓடைகள், நதிகளுக்கு குறுக்கே தடுப்பணை கட்டுகிறோம். நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயத்திற்கு வழிவகை செய்கிறோம். இந்தியாவில் வேறு மாநிலங்களில் இதுபோன்ற திட்டம் இல்லை. கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். எதிர் கட்சியாக இருக்கும் போதே தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் அராஜகம் செய்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் நீங்களே சிந்தித்து பாருங்கள்.

நீர்மேலாண்மை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை நியமித்து இருக்கிறோம். உபரிநீரை வறட்சி பகுதிக்கு எடுத்து சென்று, ஏரியில் நிரப்பி அந்த பகுதி மக்களின் தேவைக்கான நீரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது, சாதிக்பாஷா என்பவர் தனியார் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தார். அவர் சி.பி.ஐ. விசாரணையின் போது, மர்மமாக இறந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்து முடித்து விட்டார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதிக்பாஷாவின் மனைவி பத்திரிகையில் விளம்பரம் செய்து இருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்து பொறுத்து கொள்ள முடியாத எதிர்கட்சியினர் அவரது காரை தாக்கினார்கள். அதனை எல்லாம் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுப்போம்.

நமது வெற்றி வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பிரசாரத்தின் போது, அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், ஒன்றிய செயலாளர் சி.செல்வம், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் லீலாசுப்பிரமணியம், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, பட்டாசு குமார், ஆர்.ஆறுமுகம், தே.மு.தி.க. நகர செயலாளர் என்.சேட்டு மற்றும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரசாரத்தின் போது முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழியெங்கிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனைத்து பகுதிகளிலும் மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர்.

முதல் - அமைச்சரின் வருகையையொட்டி திருப்பத்தூர் நகர் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அதைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை பகுதியில் ஆசிரியர் நகர், சந்தைகோடியூர் ஆகிய பகுதிகளில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன், ஜோலார்பேட்டை நகரசபை முன்னாள் தலைவர் எஸ்.வசுமதி சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.சி.அழகிரி, ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சா.ரமேஷ், ஜெயபுரம் கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகம் மற்றும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story