பப்பாளி.. தக்காளி.. ஆப்பிள்..


பப்பாளி.. தக்காளி.. ஆப்பிள்..
x
தினத்தந்தி 24 March 2019 3:18 PM IST (Updated: 24 March 2019 3:18 PM IST)
t-max-icont-min-icon

அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர்’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள்.

ழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘ஆப்பிள் போன்ற கன்னங்களை கொண்டவர்’ என்றும், ‘பப்பாளி போன்ற பள பளப்புக்கு சொந்தக்காரர்’ என்றும், ‘தக்காளி போன்ற சிவந்த உதடுகளை பெற்றவர்’ என்றும் வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு ஆப்பிள், பப்பாளி, தக்காளி போன்றவைகளை பயன்படுத்தவேண்டும்.

வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’

நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.

பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கறுப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.

மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.

இளமைக்கு தர்பூசணி கலவை

தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது.

ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும்.

தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.

சுருக்கத்தைபோக்கும் தக்காளி

தக்காளி சாறும், சம அளவில் எலுமிச்சை சாறும் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தேய்க்கவேண்டும். பத்து நிமிடங்கள் கடந்ததும் கழுவி அப்புறப்படுத்தவேண்டும். இரவில் தூங்கு வதற்கு முன்னால் இதை செய்வது நல்லது. தக்காளி சாறு, தயிர், மஞ்சள் தூள் ஆகியவைகளை கலந்து சருமத்தில் பூசினால் நிறம் மேம்படும். சரும சுருக்கங்களை போக்க தக்காளிபழத்துடன் சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து அரைத்து சருமத்தில் தேய்க்கவேண்டும். ஒரு தக்காளி பழம், ஒரு கேரட் இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி தினமும் பருகிவரவேண்டும். பருகினால் சருமத்திற்கு நிறமும், ஜொலிப்பும் கிடைக்கும்.

அழகுதரும் ‘ஆப்பிள் பேக்’

ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி, சிறிதளவு தேனில் கலந்து குழைத்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் வைத்திருந்து கழுவுங்கள். சருமத்தில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை இதுபோக்கும். ஆப்பிளையும், நேந்திரம் பழத்தையும் சம அளவில் எடுத்து சிறிதளவு பால் ஆடை கலந்து ‘பேக்’ ஆக முகத்தில் பூசவேண்டும். அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் சருமம் பொலிவுபெறும்.

Next Story