வேலூரில் ஜெயிலில் சோதனை செய்ய சென்ற காவலர்களிடம் கைதிகள் ரகளை ‘டியூப் லைட்’கள் உடைப்பு


வேலூரில் ஜெயிலில் சோதனை செய்ய சென்ற காவலர்களிடம் கைதிகள் ரகளை ‘டியூப் லைட்’கள் உடைப்பு
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 24 March 2019 7:05 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஜெயிலில் சோதனை செய்ய சென்ற காவலர்களிடம் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது ‘டியூப்லைட்’கள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது. இங்குள்ள ஜெயிலில் தண்டனை, விசாரணை கைதிகள் என 700–க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் கஞ்சா போன்ற போதை பொருட்கள், செல்போன் ஆகியவற்றை கைதிகள் ரகசியமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது ஜெயிலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி செல்போன் பறிமுதல் செய்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயிலில் உள்ள 6–வது கட்டிடத்தில் சில கைதிகள் கஞ்சா, போதைப்பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக ஜெயில் காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 22–ந் தேதி ஜெயில் காவலர்கள் சென்று சோதனை நடத்தினர். அப்போது குணா என்ற கைதியின் அறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வார்டன் மதன்குமார் மற்றும் காவலர்கள் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்து குணா மற்றும் பிற கைதிகளான கோபி (வயது 27), விக்கி (25), சூர்யா (28), சந்தோஷ், சதாம்உசேன், மணிகண்டன் ஆகியோர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காவலர்களிடம், அவர்கள் தகராறில் ஈடுபட்டு கலாட்டா செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக விசாரணை அறைக்கு காவலர்கள் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் மீண்டும் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டு அங்குள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்த ‘டியூப் லைட்’களை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துணை ஜெயிலர் குப்புசாமி வேலூர் பாகாயம் போலீசில் கொடுத்துள்ள புகாரில், ஜெயில் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்த கைதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜெயிலில் காவலர்களுடன் கைதிகள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story