உரிய ஆவணங்கள் இல்லாததால் பிஸ்கெட் ஏஜென்சி ஊழியர் கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
பிஸ்கெட் ஏஜென்சி ஊழியர் வசூலித்துச்சென்ற ரூ.3½ லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உத்தமன் மற்றும் பறக்கும் படை குழுவினர் வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் சு.காட்டேரி கிராமத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவாசி நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் இருந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சரக்கு ஆட்டோவில் வந்தவர் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த அப்துல்ரசாக் என்பவராவார். அவர் வந்தவாசியில் உள்ள பிஸ்கெட் ஏஜென்சியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். வந்தவாசியிலிருந்து பல்வேறு ஊர்களில் உள்ள கடைகளுக்கு சரக்கு ஆட்டோவில் சென்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து விட்டு ஏற்கனவே வினியோகித்த பிஸ்கெட்டுகளுக்கான பணத்தை அவர் வசூலித்து விட்டு திரும்புவது வழக்கம்.
அதன்படி திண்டிவனம் பகுதியில் உள்ள கடைகளில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் பல்வேறு பொருட்கள் இவர் வேலைபார்க்கும் ஏஜென்சியிலிருந்து வினியோகிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணத்தை அவர் வசூல் செய்து கொண்டு சரக்கு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி தாசில்தார் அரிக்குமார் கூறுகையில் “பறிமுதல் செய்யப்பட்ட பணம் வந்தவாசி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை அப்துல்ரசாக் கொண்டு வந்து காண்பித்தால் அதனை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்” என்றார்
Related Tags :
Next Story