சாமல்பட்டியில் விவசாயி கொலை: 16 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சாமல்பட்டி கோவில் விழாவில் விவசாயி கொலை வழக்கில் 16 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 38). விவசாயி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் விழா நடந்தது. அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் பரசுராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அண்ணாமலை, கோவிந்தி, புகழேந்தி, மணிமேகலை, முனியம்மாள் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரப்பன் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜிம் மோகன் (37) வெற்றிவேல், வேடியப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக சரவணன், சித்திரை பாண்டியன் உள்பட 16 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான ஜிம் மோகன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் ஜிம் மோகன் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி செயலாளர் சரவணன் என்கிற சங்க தமிழன் ஆகிய 2 பேரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உத்தரவின் பேரில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாக மாவட்ட செயலாளர் கனியமுதன் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story