வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்தது


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்தது
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 24 March 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டும் இயல்பை காட்டிலும் குறைவான மழையே பதிவானது. இதனால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் தொடக்கம் முதலே மழை இல்லை. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிற்பகலுக்கு மேல் அனல் காற்று வீசுவதை உணர முடிகிறது. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் குடை பிடித்து செல்வதை பார்க்க முடிகிறது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர் ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, மோகனூர் சாலை என அனைத்து சாலைகளிலும் தர்பூசணி பழங்கள் சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவதை காண முடிகிறது.

திண்டிவனம் பகுதியில் இருந்து வாங்கி வரப்படும் இந்த தர்பூசணி பழங்கள் அவற்றின் எடை மற்றும் தரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த பழங்கள் தாகத்தை தணிப்பதாக உள்ளதால், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

Next Story