குமாரபாளையம் அருகே லாரி மோதி தந்தை-மகன் பலி பிறந்தநாள் அன்று பரிதாபம்


குமாரபாளையம் அருகே லாரி மோதி தந்தை-மகன் பலி பிறந்தநாள் அன்று பரிதாபம்
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 24 March 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே பிறந்தநாள் அன்று மாமனார், மாமியாரிடம் ஆசி வாங்கி விட்டு விசைத்தறி தொழிலாளி தனது மகனுடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்த போது லாரி மோதியதில் அவர்கள் இருவரும் பலியானார்கள்.

குமாரபாளையம், 

இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசன் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 42), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி கலாமணி (35). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். இவர்களின் 3-வது மகன் தரணி(13). இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று சேகருக்கு பிறந்தநாள் என்பதால், வட்டமலை அருகே தட்டான்குட்டை பகுதியில் உள்ள மாமனார், மாமியாரிடம் ஆசி வாங்க தனது மகன் தரணியுடன் மொபட்டில் சென்றார். அங்கு அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு சேகர், தனது மகனுடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வட்டமலை பஸ் நிறுத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையை மொபட் கடக்க முயன்றது. அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி வேகமாக வந்த லாரி, மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தந்தை-மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த நாளில் மாமனார், மாமியாரிடம் ஆசி வாங்கி விட்டு மகனுடன் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்த போது லாரி மோதியதில் தந்தை-மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story