அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். மல்லிக்குட்டை, மேடுஅள்ளி, பூமாண்டஅள்ளி, மேக்னாம்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார்.
இந்த பிரசார கூட்டங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொதுமக்களிடம் வாக்குசேகரித்து பேசியதாவது:- வலிமையான இந்தியா, வளமான தமிழகம் என்ற நோக்கத்துடன் அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும். இந்த கூட்டணியை பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர் கலந்து கொள்ளும் பிரசார கூட்டங்களில் எங்கள் கூட்டணி குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அரசு மேலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதற்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எங்கள் கூட்டணிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தை வளமான மாவட்டமாக உருவாக்க நானும், இந்த மாவட்டத்தின் அமைச்சர் கே.பி.அன்பழகனும் இணைந்து செயல்பட தொடங்கி விட்டோம்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து உபரிநீரை நீரேற்றம் செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கொண்டு வரும் திட்டத்தை முதல்-அமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார். இதன் மூலம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையும், விவசாயத்திற்கான தண்ணீர் பிரச்சினையும் தீரும். மக்களுக்காக செயல்படும் எங்களது கூட்டணிக்கு பொதுமக்கள் நல்லாதரவு தந்து வெற்றி அடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story