ஜனதா தளம்(எஸ்) கட்சியினருடன் மண்டியா, துமகூருவில் காங்கிரசார் ஒத்துழைக்க மறுப்பு முதல்-மந்திரி குமாரசாமி கடும் அதிருப்தி


ஜனதா தளம்(எஸ்) கட்சியினருடன் மண்டியா, துமகூருவில் காங்கிரசார் ஒத்துழைக்க மறுப்பு முதல்-மந்திரி குமாரசாமி கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 24 March 2019 10:30 PM GMT (Updated: 24 March 2019 6:56 PM GMT)

மண்டியா, துமகூருவில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினருடன் காங்கிரசார் ஒத்துழைக்க மறுத்து வரும் நிலையில், இதுபற்றி முதல்-மந்திரி குமாரசாமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஹாசன் தொகுதியில் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.

இன்று (திங்கட்கிழமை) துமகூரு தொகுதியில் தேவேகவுடாவும், மண்டியா தொகுதியில் அவரது பேரனும், முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியும் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

இந்த நிலையில் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் குமாரசாமி நேற்று காலை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் சிவசங்கரரெட்டி, ஜமீர்அகமதுகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய குமாரசாமி, ‘‘மண்டியா, துமகூரு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை. அவர்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியினருடன் சேர்ந்து ஒத்துழைக்க மறுக்கின்றனர்’’ என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்கள், அதிருப்தியாளர்களை சரிப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, இது சரியல்ல என்றும் குமாரசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு வழங்கி இருப்பது, எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. சில தொகுதிகளில் காங்கிரசார் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதை அக்கட்சியின் தலைவர்கள் சரிசெய்வார்கள்” என்றார்.

இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வீரப்பமொய்லி, தேவேகவுடாைவ சந்தித்து ஆதரவு வழங்குமாறு கோரினார்.

Next Story