100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு தீபஜோதி பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு தீபஜோதி பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 25 March 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு தீபஜோதி பேரணியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருவள்ளூர் நகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு தீபஜோதி பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் திரளான பள்ளி மாணவ-மாணவிகள், நகராட்சி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி ராஜாஜி சாலை, காந்தி சாலை, பஜார்வீதி, வடக்குராஜவீதி, மோதிலால் தெரு, தேரடி, கிழக்கு குளக்கரை தெரு, ஜே.என்.சாலை, ராஜாஜிபுரம், ரெயில் நிலையம், நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட்டு வழியாக சென்று முடிவில் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. இதில் கலந்து கொண்டவர்களை கலெக்டர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயக்குமார், உதவி திட்ட அலுவலர் வீரமணி, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, நகராட்சி மேலாளர் கோவிந்தராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் அருணா, திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் குறுவட்ட வருவாய்த்துறை சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியபாளையம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ரமணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை தாசில்தார் வில்சன் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்து கலந்துகொண்டார். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். பெரியபாளையம் போலீஸ் நிலையம் அருகே இருந்து புறப்பட்டு பஜார் வீதி வழியாக பஸ் நிலையத்தை பேரணி சென்றடைந்தது.

பின்னர் அங்கிருந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வகுமார், கல்பனா, வேலாயுதம், சதீஷ், லட்சுமி, பெரியபாளையம் ஊராட்சி செயலாளர் குமரவேல், கிராமஉதவியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story