நாக்பாடாவில் 12 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
மும்பை நாக்பாடாவில் 12 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை,
மும்பை நாக்பாடா, தெம்கர் மோகல்லா பகுதியில் வசித்து வருபவர் முகமது சேக். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் குல்சன்(வயது12). அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது சேக் வீட்டருகே உள்ள கேட்டரிங் அலுவலகத்துக்கு சென்றுவிட்டார். வீட்டில் சிறுமி குல்சன் மட்டும் தனியாக இருந்தாள்.
இந்தநிலையில் இரவு 9.30 மணியளவில் வெளியில் சென்று இருந்த சிறுமியின் தாய் திரும்பி வந்தார். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் வெகுநேரமாக தட்டியும் குல்சன் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து அவர் அருகில் உள்ள அலுவலகத்தில் இருந்த கணவரிடம் மாற்று சாவியை வாங்கி வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது, குல்சன் சுவரில் மாட்டியிருந்த பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் மகளை மீட்டு ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாக்பாடா பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story