கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு மேலும் ஒரு வாலிபரை தேடும் பணி தீவிரம்
கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொடுமுடி,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காரூடையாம்பாளையம் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி அந்தப்பகுதியில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஈரோடு–கரூர் எல்லையில் உள்ள நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே செல்லும் காவிரி ஆற்றுக்கு வந்தனர். பின்னர் அந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் தங்கியிருந்தார்கள்.
நேற்று காலை பக்தர்கள் அனைவரும் ஆவுடையார்பாறை பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். இதில் சில பக்தர்கள் குளித்த பின்னர், தீர்த்தம் எடுத்துவிட்டு செல்லாண்டியம்மன் கோவிலை நோக்கி சென்றனர்.
அப்போது காரூடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் நித்திஷ் (வயது 17), செந்தில்குமாரின் மகன் நவீன்குமார் (18), நாகராஜின் மகன் பிரபாகரன் (24) ஆகியோர் மட்டும் ஆற்றில் நீண்ட நேரமாக குளித்துக்கொண்டு இருந்தனர். இதில் நித்திஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதனை கவனித்த நவீன்குமார், பிரபாகர் ஆகியோர் நித்திசை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை பார்த்த பக்தர்கள், ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், புகலூர் மற்றும் கொடுமுடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடினார்கள். இதில் அவர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் நித்திஷ் மற்றும் நவீன்குமார் உடல்கள் மீட்டு மேலே கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களில் உடல்களை பார்த்து, உறவினர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
இதைத்தொடர்ந்து நித்திஷ், நவீன்குமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆற்றில் மூழ்கிய பிரபாகரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) தேடும் பணி மீண்டும் நடைபெறும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர்கள் 2 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஊஞ்சலூர் அருகே உள்ள கருவேலாம்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி மேலும் ஒரு வாலிபர் இறந்தார். இதன் விவரம் வருமாறு:–
சிவகிரி அருகே அம்மன் கோவில் சிலோன் காலனியை சேர்ந்த ரகுபதி மகன் பூபாலன் (18) என்பவர் நேற்று தனது நண்பர்கள் அசோக்குமார், ராகுல், சந்தோஷ்குமாருடன் மோட்டார்சைக்கிளில் ஊஞ்சலூர் அருகே உள்ள கருவேலாம்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்றார். பின்னர் மதியம் 2.30 மணி அளவில் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். இதில் பூபாலன் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்துள்ளார்.
இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி அறிந்த மீனவர்கள் அங்கு சென்று ஆற்றில் இறங்கி பூபாலனை தேடிப்பார்த்தார்கள். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பூபாலன் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.