துறையூர் அருகே நள்ளிரவில் மனைவியை அடித்துக்கொன்ற விவசாயி வெட்டிக்கொலை மகன் உள்பட 2 பேர் கைது


துறையூர் அருகே நள்ளிரவில் மனைவியை அடித்துக்கொன்ற விவசாயி வெட்டிக்கொலை மகன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 7:52 PM GMT)

துறையூர் அருகே நள்ளிரவில் மனைவியை அடித்துக்கொன்ற விவசாயியை வெட்டிக்கொலை செய்ததாக மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது தாளூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45). இவருடைய மனைவி மலர்கொடி(43). இவர்கள் விவசாயம் செய்து வந்தனர். இத்தம்பதிக்கு சின்னதுரை(24), ராஜதுரை, ராமதுரை ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் பட்டதாரியான சின்னதுரை, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். பரமசிவத்தின் வீட்டின் அருகே அவருடைய தந்தை நடேசன்(70) வசித்து வருகிறார்.

பரமசிவம் தினமும் மாலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து, மலர்கொடியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினமும் அவர் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரை மலர்கொடி கண்டித்தார்.

இரவில் பரமசிவம், மலர்கொடி ஆகியோர் வீட்டில் படுத்திருந்தனர். அவர்களுடைய மகன்கள் அருகில் உள்ள நடேசனின் வீட்டில் படுத்திருந்தனர். நள்ளிரவில் பரமசிவம்- மலர்கொடி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம், வீட்டில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து மலர்கொடியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து வலியால் துடித்த மலர்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு நடேசன் மற்றும் சின்னதுரை ஆகியோர் அங்கு வந்தார். அப்போது மலர்கொடி பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கும், பரமசிவத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த அரிவாளை எடுத்து, பரமசிவத்தின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பரமசிவம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மாறன், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், கிராம நிர்வாக அதிகாரி ஜெகனாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். பின்னர் மலர்கொடி மற்றும் பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சின்னத்துரை, நடேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story