மானாமதுரை டாஸ்மாக் கடையில் 3 மதுபாட்டில் வாங்கியவருக்கு ரூ.1000 அபராதம் விதித்த போலீசார்
மானாமதுரையில் டாஸ்மாக் கடையில் 3 மதுபாட்டில் வாங்கியவருக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
மானாமதுரை,
மானாமதுரை நகரில் 6 இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சிலர் அடிக்கடி கடைக்கு வந்து மது வாங்குவதை தவிர்க்க கூடுதலாக வாங்கிச் செல்வது வழக்கம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதால், மது விற்பனையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர். அடிக்கடி வாகனச்சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது..
இந்தநிலையில் மானாமதுரை பூக்கொல்லை பகுதியை சேர்ந்த ஒருவர் தனது நண்பருடன் நேற்று முன்தினம் மாலை டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 2 மது பாட்டில்களும், ஒரு பீர் பாட்டிலும் வாங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதுவிலக்கு போலீசார், அளவுக்கு அதிகமாக மதுபாட்டில் வாங்கியதாக கூறி ரூ.1000–ம் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
அதில் குழப்பமடைந்த அவர் எத்தனை பாட்டில் வாங்க அனுமதி என்று கேட்டதற்கு, அதற்கு பதில் கூறாமல் அபராதத்தை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அபராதம் தொகையை வசூலித்துள்ளனர்.
இந்த சம்பவம் மதுபிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நபருக்கு இத்தனை மதுபாட்டில்தான் வழங்கப்படும் என்று கடையில் முறையாக எழுதி வைக்க வேண்டும் எனவும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.