நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 25 March 2019 4:00 AM IST (Updated: 25 March 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோவிலில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதேபோல திரளான பக்தர்கள் அலகு குத்தியும், குழந்தைகள் இல்லாமல் இருந்து குழந்தை பிறந்த தம்பதிகள் கரும்பில் தொட்டில் கட்டி தங்களது குழந்தையை கோவிலுக்கு மேள தாளங்கள் முழங்க கொண்டு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் கொட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவில் பூச்சொரிதலை முன்னிட்டு புதுக்கோட்டை, அன்னவாசல், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

வருகிற 31-ந் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றம் தொடங்க உள்ளது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மண்டகப்படி தாரர்கள் நிகழ்ச்சியும், முத்துமாரியம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. வருகிற ஏப்ரல் 7-ந் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story