பழனி அருகே, லாரி-மோட்டார் சைக்கிள் மோதலில் தந்தை-மகன் பலி - கொடைக்கானலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
பழனி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை-மகன் பலியாகினர். பெண் பலத்த காயம் அடைந்தார்.
பழனி,
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் அருகேயுள்ள ஆர்.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் என்ற கோபி (வயது 40). இவர் சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்தார். இவருடைய மனைவி நான்சி (30). இந்த தம்பதியின் மகன் அஸ்வின் ஆபிரகாம் (8). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பெருமாள் தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் கொடைக்கானல் சென்றார். அங்கு சுற்றுலா இடங்களை கண்டுகளித்து விட்டு, மாலையில் அவர்கள் கொடைக்கானல்-பழனி மலைப்பாதை வழியாக திண்டுக்கல்லுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இவர்கள் கொடைக்கானல் மலைப்பாதையை கடந்து பழனியை அடுத்த ஆலமரத்துக்களம் அருகே உள்ள வண்ணாந்துறை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். ஒரு வளைவில் திரும்பியபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கொடைக்கானல் நோக்கி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பெருமாள் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த பெருமாள், அஸ்வின் ஆபிரகாம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நான்சிக்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், விபத்து குறித்து பழனி போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த நான்சியை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story