குமிட்டிபதி பகுதியில், வாகன சோதனையில் ரூ.3¼ லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி


குமிட்டிபதி பகுதியில், வாகன சோதனையில் ரூ.3¼ லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 24 March 2019 11:15 PM GMT (Updated: 25 March 2019 12:25 AM GMT)

குமிட்டிபதி பகுதியில் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¼ லட்சத்தை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

போத்தனூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 6 நிலையான கண் காணிப்புகுழுக்களையும், பறக்கும் படைகளையும் அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலந்தாவளம்- நாச்சிபாளையம் ரோட்டில் குமிட்டிபதி பகுதியில் பறக்கும்படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் காரில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து பறக்கும்படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு வெண்ணக்கரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும், வெற்றிலை வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தாராபுரம் கண்ணன் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.53 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

Next Story