விருத்தாசலம் அருகே பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் கொலை - நண்பருக்கு தீவிர சிகிச்சை
விருத்தாசலம் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கீழப்பாளையூர் காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ் மகன் அருள்பாண்டியன்(வயது 21), ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவரும், அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் பூவரசன்(19) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். இருவரும் நேற்று அந்த பகுதியில் உள்ள மணிமுக்தாற்று கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் அங்கு அமர்ந்திருந்தனர். இவர்களுக்கும் அருள்பாண்டியன் தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது.
இந்த நிலையில், ஆற்றங்கரை பகுதியில் இருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து அவர்களை விரட்டியதாக தெரிகிறது. இதில் தேன்கூட்டை வேண்டுமென்றே கலைத்து விட்டதாக கூறி இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த வாலிபர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென அருள்பாண்டியனை வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்த அருள் பாண்டியன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். மேலும் பூவரசனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதை பார்த்த அந்தபகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருள்பாண்டியனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து பூவரசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த அருள் பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அருள் பாண்டியனின் உறவினர்கள், அவரது சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், கீழப்பாளையூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும், அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பதற்றம் நீடித்து வருவதால் பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story