வீடு வீடாக சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் - அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு


வீடு வீடாக சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் - அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2019 4:00 AM IST (Updated: 25 March 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

வீடு வீடாக சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என ஆலங்குளத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசினார்.

ஆலங்குளம், 

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கினார். முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெயபாலன், த.மா.கா. மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-

அனைத்து கூட்டணி கட்சி தொண்டர்களும் தினமும் ஒவ்வொரு வீடு வீடாக சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். எனது குடும்பம் கடந்த 42 ஆண்டுகளாக மக்களுக்காக சேவையாற்றி வருகிறது. தேர்தல் நாள் வரை தொண்டர்கள் எனக்காக உழையுங்கள். நான் அடுத்த 5 வருடங்கள் உங்களுக்காக உழைக்கின்றேன். நான் மேல் சபை உறுப்பினராக இருந்தபோது ஆலங்குளம் நகரப்பஞ்சாயத்து பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டிக் கொடுத்துள்ளேன். மேலும் இந்த தொகுதிக்கு உட்பட்ட நல்லூர், கரும்புலியூத்து, காளத்திமடம், மருதம்புத்தூர், பாப்பாக்குடி, கடையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திருமண மண்டபம், குடிநீர் வசதி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை எனது மேல்சபை உறுப்பினர் நிதியில் இருந்து செய்து கொடுத்துள்ளேன். நான் இப்போது வெற்றி பெற்று எம்.பி. ஆனவுடன் அனைத்து கிராமங்களுக்கும் எம்.பி. நிதியில் இருந்து திருமண மண்டபம் கட்டிக் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி பாண்டியன், நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஒன்றிய தலைவர் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ், தே.மு.தி.க. நகர செயலாளர் பழனிசங்கர், பேரவை செயலாளர் தனபால், நகர துணை செயலாளர் கணேசன், பாலகிருஷ்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர தலைவர் கணேசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சாலமோன்ராஜா நன்றி கூறினார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று காலையில் மேலப்பாளையத்திற்கு சென்றார். அங்குள்ள கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள துதியின் கோட்டை கிறிஸ்தவ ஆலயத்திற்கும், சமாதானபுரத்தில் உள்ள அசெம்பிளி ஆப் காட் சபைக்கும் சென்று ஆதரவு திரட்டினார். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் பார்வையிட்டார். நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், பகுதி செயலாளர் ஜெனி, முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story