பாளையங்கோட்டையில் , காதலன் வீட்டில் நிறுத்தியிருந்த லாரி, கார் உடைப்பு; பந்தலுக்கு தீ வைப்பு - காதலியின் சகோதரருக்கு வலைவீச்சு
பாளையங்கோட்டையில் காதல் தகராறு காதலன் வீட்டில் நிறுத்தி இருந்த லாரி, கார்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு, பந்தலுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிய காதலியின் சகோதரரை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 75). நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய பேரன் பாலவிக்னேஷ்(27). இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். பாலவிக்னேஷ் தனது தாத்தாவுடன் வசித்து வருகிறார்.
இவர் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் அந்த மாணவியை நேற்று முன்தினம் மாலையில் இருந்து காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாலவிக்னேஷ் அந்த பெண்ணை அழைத்து சென்று இருப்பார் என்று அந்த மாணவியின் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவியின் தந்தை முத்துப்பாண்டி, இது குறித்து தனது மகன் முத்துக்குட்டியிடம் தெரிவித்து உள்ளார். முத்துக்குட்டி நேற்று காலையில் பால விக்னேஷ் வீட்டிற்கு சென்று அவருடைய தாத்தாவிடம் உனது பேரனை எங்கே என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குட்டி, அவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ஒரு லாரி மற்றும் 3 கார்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, வீட்டு முன்பு போட்டு இருந்த பந்தலுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காதலியின் சகோதரரை தேடிவருகின்றனர். முத்துக்குட்டி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story