திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேட்புமனு தாக்கல் ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் மனுதாக்கல்
திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணி அளவில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் இரா.காளிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை தொகுதியில் நிச்சயமாக அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக புதிய ரெயில் பாதை அமைப்பதற்கான பணியை மேற்கொள்ள உறுதுணையாக இருப்பேன். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யானை இல்லை என்ற ஒரு குறை இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு எனது சொந்த செலவில் யானை வாங்கி கொடுப்பேன். பஸ் நிலையம் புதிதாக அமைத்தால் அது மக்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வேன்.
மேல் செங்கம் பகுதியில் பழத்தோட்டம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கிராமப்புறங்களிலும் கொண்டு செல்லப்படும். திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தனூர் அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பு மனுதாக்கலின் போது தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.என்.நேரு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேரு, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், த.மா.கா. மாவட்ட தலைவர் மணிவர்மா மற்றும் பலர் உடனிருந்தனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இல.மைதிலியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு, வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், கே.வி.சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்துக்கு மாற்றாக அவரது தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான எம்.கிருஷ்ணசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவர்களுடன் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, அம்பேத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். செண்பகத்தோப்பு அணையினை சீரமைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி - செய்யாறு - ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய ரெயில்பாதை திட்டத்தினை பிரதமராக வரக்கூடிய ராகுல்காந்தியிடம் எடுத்துக் கூறி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். ஆரணி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்’ என்றார்.
இதேபோல ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியின் மாவட்ட தலைவர் க.சுந்தர் (வயது 45) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Related Tags :
Next Story