ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல்


ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 5 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஓசூர்,

தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 22-ந் தேதி வரை நாம் தமிழர் கட்சி, சிவசேனா கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்பட 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், தனது வேட்புமனுவை, ஓசூர் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான விமல்ராஜிடம் தாக்கல் செய்தார். தொடர்ந்து அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக, ஜெ.பி. என்ற ஜெயப்பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி பிரகாஷ் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் விமல்ராஜிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மேலும் ஓசூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், ஊத்தங்கரையை சேர்ந்த முருகன் ஆகியோரும் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர். நேற்று மொத்தம் 5 பேர் மனுதாக்கல் செய்தனர். ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 10 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Next Story