உடுமலை சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


உடுமலை சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 26 March 2019 4:00 AM IST (Updated: 26 March 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை சட்டமன்றத்தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ‘விவிபேட்’ எந்திரங்கள் ஆகியவை உடுமலைக்கு வந்து சேர்ந்தன. அவை உடுமலை அரசு கலைக்கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

உடுமலை,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உடுமலை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் தாங்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம், அது அந்த சின்னத்தில் பதிவாகியுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்வதற்கான ‘விவிபேட்’ எந்திரங்கள் ஆகியவற்றின் தேவை குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடம், உடுமலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ. அசோகன் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ‘விவிபேட்’ எந்திரங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடுமலைக்கு நேற்றுகாலை கொண்டு வரப்பட்டன. மொத்தம் 352 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 363 ‘விவிபேட்’ எந்திரங்களும் 2 வாகனங்கள் மூலம் உடுமலைக்கு கொண்டு வரப்பட்டன.

இவை உடுமலை அரசு கலைக்கல்லூரிக்கு வந்து சேர்ந்ததும் அந்த வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த ‘சீல்’கள் அகற்றப்பட்டு, அந்த எந்திரங்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் இறக்கப்பட்டு கல்லூரியின் வகுப்பறையில் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டன. ஒரு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், மற்றொரு அறையில் ‘விவிபேட்’ எந்திரங்களும் வைக்கப்பட்டன. இந்த பணிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ. அசோகன், தாசில்தார் தங்கவேல், தேர்தல் துணை தாசில்தார் பொன்ராஜ் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், தேர்தல் பணி பொறுப்பாளர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.ஆர்.ஓம்பிரகாஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த எந்திரங்கள் கல்லூரி வகுப்பறைகளில் இருப்பு வைக்கப்பட்டதும் அந்த 2 அறைகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.


Next Story