தலைவாசல் அருகே ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1.21 கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
தலைவாசல் அருகே ஏ.டி.எம்.மையத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1.21 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தலைவாசல்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளன. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் போலீஸ் நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி அதை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் ஆமா சித்தர் கிராமத்தைச் சேர்ந்த தீரன் (வயது 32) என்றும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருவதாகவும் கூறினார். இதையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் வேனில் சோதனை நடத்தினர். அதில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 21 லட்சம் இருப்பது தெரியவந்தது.
இதையொட்டி டிரைவர் தீரனிடம் மற்றும் அதில் வந்த மற்ற 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் திருச்சியில் இருந்து வீரகனூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப கொண்டு செல்வதாக கூறினர். ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரிகள் ரூ.1 கோடியே 21 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அலுவலர் வேடியப்பன், கெங்கவல்லி தாசில்தார் முருகையன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளிகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் தாரமங்கலம் பாப்பன்பாடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சேலம் திருமலைகிரி காட்டுவளவு பகுதியை சேர்ந்த மதன் (40) என்பவர் காரில் வந்தார். அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.79 ஆயிரம் இருந்தது தெரிந்தது. இதையொட்டி ரூ.79 ஆயிரத்தை பறிமுதல் செய்து அதை சங்ககிரி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அமிர்தலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.
இதே போன்று சங்ககிரி கெமிக்கல்ஸ் பிரிவுரோட்டில் ஆய்வின் போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோவை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வரும் மணிகண்டன் (35) என்று தெரியவந்தது. மேலும் அவர் உரிய ஆவணம் இன்றி ரூ.97 ஆயிரத்து 520 வைத்து இருந்ததும் தெரிந்தது. இதையொட்டி அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஏற்காடு அடிவாரம் பகுதியில் பறக்கும்படை அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக கன்னங்குறிச்சி பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் ரமேஷ்(வயது35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை அதிகாரிகள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாடு அறை அலுவலர் ஸ்ரீதரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story