சாமல்பட்டி விவசாயி கொலை வழக்கு: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டரிடம் புகார்
சாமல்பட்டி விவசாயி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த புகழேந்தி என்பவரது மனைவி அமலா தலைமையில், நேற்று சிலர் கலெக்டர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 22-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா அன்று இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஊர்பொது நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மேடையில் ஏறி, அவர்களது கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை செய்து கொண்டிருந்தனர். இதற்கு ஊர் முக்கிய பிரமுகர்கள் தனபால், லட்சுமணன் ஆகியோர் இது ஊர்த்திருவிழாவா அல்லது கட்சி நிகழ்ச்சியா? என கேட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன், வெற்றிவேல், சங்கத்தமிழ் சரவணன் உள்பட 29-க்கும் மேற்பட்டவர்கள், வீடு புகுந்து தாக்கினார்கள். இதில், படுகாயம் அடைந்த லட்சுமணன், கோவிந்தராஜ், சக்திவேல், முனியம்மாள் ஆகியோரை சிகிச்சைகாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பரசுராமனை, போலீஸ் நிலையத்திற்குள் உள்ளே விடாமல், ஆயுதங்களுடன் ஜிம்மோகன் தரப்பினர் மிரட்டினார்கள்.
மேலும், பரசுராமனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ஜிம் மோகன் தலைமையிலான கும்பல், தடுக்க சென்ற மணிமேகலா, புகழேந்தி, உண்ணாமலை, கோவிந்தி, ராமன் ஆகியோரையும் கடுமையாக தாக்கினார்கள். இந்த வழக்கில் ஜிம்மோகன் உள்பட 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கொலை சம்பவங்கள், கலவரங்களில் ஈடுபட்டு வரும் ஜிம் மோகன் ஏற்கனவே 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டும் உடனே ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்.
எனவே, இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை யடுத்து அவர்களிடம் பேசிய கலெக்டர் பிரபாகர், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
Related Tags :
Next Story