ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் பதில் அளிப்பேன் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
புதுச்சேரியில் ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் பிரசாரத்தின்போது விரிவான பதிலளிக்க உள்ளேன் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி.சேகர் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ரங்கசாமி பேசியதாவது:–
நமது கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் நாராயணசாமியை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அவருக்கு போதிய அனுபவம் கிடையாது என அனைவரும் விமர்சித்து வருகிறார்கள்.
நமது வேட்பாளர் டாக்டருக்கு படித்த திறமையான நபர். அவரால் எதையும் விரைவில் கற்றுக்கொள்ளமுடியும். இளைஞர்களால்தான் விரைவாக செயல்பட முடியும். எனவே அவர் நாடாளுமன்றத்தின் பணியை அறிந்து மாநில நன்மைக்கு பாடுபடுவார். மேலும் சிறந்த உறுப்பினராக தேர்வு செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக எந்தவொரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நாங்கள் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டோம். காங்கிரஸ் கட்சி ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கியது முதல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். எங்களை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறுகிறார்கள். மக்களுக்கு நம்மை செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி தான் எங்கள் கூட்டணி.
தேர்தலுக்கு குறுகிய காலம்தான் உள்ளது. எனவே கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணியை சுறுசுறுப்பாக மேற்கொண்டு நமது வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தேர்தல் பிரசாரம் விரைவில் தொடங்க உள்ளோம். அப்போது ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்குகள் சேகரிக்க உள்ளேன். அந்த சமயத்தில் ஆளும் கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதில் அளிப்பேன்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.