ஊட்டியில் வாகன சோதனை,புதிய இருசக்கர வாகனங்கள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஊட்டியில் நடந்த வாகன சோதனையில் புதிய இருசக்கர வாகனங்கள், அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாகனங்களில் அதிகமான பரிசு பொருட்கள், மதுபானங்கள் கொண்டு செல்லக்கூடாது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குன்னூரில் இருந்து ஊட்டியை நோக்கி வந்த சரக்கு வேனை எல்லநள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது மிக்சி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் எந்திரம், அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் சரக்கு வேனுடன் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மிக்சி உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் ஆகும். இவை கோவையில் இருந்து குன்னூர் வழியாக கூடலூர் ஸ்ரீமதுரை பகுதியில் ஒரு கடைக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற போது சிக்கியது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். லாரியில் பதிவு செய்யப்படாத புதிய 20 இருசக்கர வாகனங்கள் இருந்தது தெரியவந்தது. இந்த புதிய வாகனங்கள் கோவையில் இருந்து ஊட்டிக்கு வருவதற்கு மட்டுமே ரசீது இருந்தது. ஆனால் கூடலூர் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. எனவே புதிய 20 இருசக்கர வாகனங்கள் லாரியோடு பறிமுதல் செய்யப்பட்டு, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டது.
அதே பகுதியில் வாகன சோதனையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் ராஜ் என்பவர் ஓட்டி வந்த காரில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 54 அமெரிக்கா டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோவையை சேர்ந்த மகேஷ் வாகனத்தில் சோதனை செய்ததில் ரூ.54 ஆயிரத்து 400 சிக்கியது.
Related Tags :
Next Story