மானாமதுரை 4 வழிச்சாலை பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது


மானாமதுரை 4 வழிச்சாலை பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை 4 வழிச்சாலை பாலத்தின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுகள் நடந்து முடிந்ததால், பாலங்களில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

மானாமதுரை,

மானாமதுரை வழியாக ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ரூ.936 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சிலைமான், புளியங்குளம், மணலு£ர், திருப்புவனம், லாடனேந்தல், மானாமதுரை, மேலப்பசலை, கமுதக்குடி உள்ளிட்ட இடங்களில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பாலங்கள் அனைத்தும் ஒரு கி.மீ நீளமுள்ள பாலங்களாக கட்டப்பட்டுள்ளன. மானாமதுரை அருகே உள்ள மேலப்பசலை பாலம் மட்டும் இருவழி பாலமாக கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்திலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் பாலப்பணிகள் இன்னும் முடிவடையாததால் அதனை தவிர்த்து மற்ற பாலங்கள் அனைத்திலும் கடந்த சில மாதங்களாக போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன. பாலங்களில் வாகனங்கள் சென்று வந்த பின் பாலத்தில் பாதிப்பு ஏதும் உள்ளதா என ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். கமுதக்குடி, பரமக்குடி, மேலப்பசலை, லாடனேந்தல் பாலங்களில் ஆய்வு முடிந்துவிட்டது. மானாமதுரை பாலத்தில் போக்குவரத்து ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.

தற்போது ஆய்வுகள் முடிவடைந்ததால் இன்று (செவ்வாய்கிழமை) முதல் பாலத்தின் இருபாதைகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மானாமதுரையில் பாலத்தின் ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில், போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதுபோன்று மற்ற பாலங்களின் கீழே இரும்பு சாரங்கள் அமைத்து பாலத்தின் மேலே 5 டன் முதல் 30 டன் வரையிலான எடைகள் அடுக்கப்பட்டு பாலத்தில் ஏற்படும் அதிர்வு, நெகிழ்வு தன்மை உள்ளிட்டவைகள் அளவிடப்படும்.

பாலத்தின் ஒருபுறம் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது. ஒருபுறம் முடிந்த பின் மறுபுறம் இதே போன்ற சோதனை நடத்தப்படும். பாலத்தின் தாங்கு திறன் குறிப்பட்ட நாட்களுக்கு பிறகு நவீன கருவிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாலத்திலும் 12 மீட்டர் அகலத்திலும் 25.4 மீட்டர் நீளத்திலும் இந்த சோதனை நடத்தப்படும். தற்போது மணலூர், மானாமதுரை, கமுதக்குடி பாலங்களின் தாங்குதிறன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வு முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றனர்.


Next Story