பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைதான சபரிராஜன் உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு - காணொலி காட்சி மூலம் ஆஜர்


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைதான சபரிராஜன் உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு - காணொலி காட்சி மூலம் ஆஜர்
x
தினத்தந்தி 26 March 2019 5:15 AM IST (Updated: 26 March 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைதான சபரிராஜன் உள்பட 3 பேரை போலீசார் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தினார்கள். அவர்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.

கோவை, 

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்து சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சபரிராஜன் (வயது 25), அவருடைய நண்பர்கள் சதீஷ் (27), வசந்தகுமார் (24) ஆகியோரை கடந்த 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார். கைதான 4 பேரும் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து உள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த மனு கடந்த 15-ந் தேதி தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்களும், வக்கீல் பயிற்சி எடுத்து வரும் சட்டக்கல்லூரி மாணவர்களும் அங்கு திரண்டதால் அவரை கோர்ட்டுக்கு அழைத்துவர முடியாத நிலை ஏற்பட்டது.எனவே போலீசார் நீதிபதியிடம் அனுமதி பெற்று சிறையில் இருந்தபடியே திருநாவுக்கரசை காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த நிலையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்தது. எனவே அவர்களை நேற்று காலையில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும்.

அவர்கள் 3 பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கோவை மத்திய சிறையில் இருந்தபடியே 3 பேரையும் போலீசார் காணொலி காட்சி மூலம் கோவை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 3 பேருக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். 

Next Story