நாமக்கல் அருகே விஷம் குடித்து மயங்கிய காதல்ஜோடி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
நாமக்கல் அருகே விஷம் குடித்து மயங்கிய காதல்ஜோடிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்,
தேனியை சேர்ந்த 19 வயது நிரம்பிய மாணவர் ஒருவரும், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவரும் நாமக்கல் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இவர்கள் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இரவு விடுதிக்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இருவரும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தடியில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்ததும், இது பெற்றோருக்கு தெரியவந்ததும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதும், இதனால் மனம் உடைந்த காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருப்பதும் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story