மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் வாகன சோதனையில் ரூ.3 கோடி பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலைமுன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. அதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் கையோடு வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லை என்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும். ரூ.10 லட்சத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து, அந்த பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். வியாபாரிகளும் பணத்தை கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை எடுத்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்காக 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த குழுவினர் சுங்கச்சாவடி, முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாகனங்களில் பொருட்கள் எடுத்து செல்வதை கண்காணித்து, பறிமுதல் செய்கிறார்கள். இவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட வெள்ளி பொருட்கள், சேலைகள், சில்வர் தட்டுகள், ஏ.டி.எம்.மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் லட்சக்கணக்கான பணம் மற்றும் மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 15 நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படுகிறது. இல்லையென்றால் கருவூலங்களில் சேர்க்கப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story