தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் “2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் பேச்சு


தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் “2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2019 3:45 AM IST (Updated: 26 March 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் பேசினார்.

தென்காசி, 

தென்காசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ் குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

இங்கு கூடியுள்ள தொண்டர்கள் கூட்டத்தை பார்க்கும்போது வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்று இல்லை. இது ஒரு மாநாடு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையை பார்க்கும்போது நான் தென்காசி தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவேன். நான் இந்த தொகுதிக்கு புதிதல்ல. எனது சொந்த தொகுதி தான் இது. தென்காசி நகரில் நான் 10 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும்.

நீங்கள் தனித்தனியாக ஒவ்வொரு வீடாக ஓட்டு கேட்க வேண்டாம். உங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள 4 வீடுகளில் கேட்டால் போதும். ஒரு தெருவுக்கு 20 வாக்குகள் எனக்கு கிடைத்தாலே அது பெரிய வெற்றி. நிர்வாகிகள் எனக்காக 75 சதவீதம் ஓட்டுகள் வாங்கி கொடுத்தால் அவர்களை எனது சொந்த செலவில் டெல்லிக்கு அழைத்துச் செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி நாடார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தினேஷ், பார்வர்டு பிளாக் நிர்வாகி தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு வட்டார தலைவர் போஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நயினா முகம்மது, ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், சமத்துவ மக்கள் கழக நிர்வாகி லூர்து அந்தோணி, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கலிவருணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தென்காசி நகர தி.மு.க. செயலாளர் சாதிர் நன்றி கூறினார்.

கடையநல்லூரில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார், நகர செயலாளர் சேகனா, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, ரவிசங்கர் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Next Story