சிவப்பு சிலந்தி தாக்குதல், பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு


சிவப்பு சிலந்தி தாக்குதல், பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

சிவப்பு சிலந்தி தாக்குதல் காரணமாக குந்தா பகுதியில் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும். அப்போது தேயிலை செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்படும். அதன்பின்னர் கோடை மழை பெய்யும்போது மீண்டும் தேயிலை செடிகளில் மகசூல் பிடிக்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை மழை இன்னும் பெய்யவில்லை. இதனால் நீலகிரியில் பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி பச்சை தேயிலை மகசூல் மற்றும் காய்கறி சாகுபடி குறைந்து வருகிறது.

இந்த நிலையில் குந்தா பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயம் மேற்கொண்டுள்ளனர். இங்கு தற்போது பகலில் வெயில், இரவில் பனிப்பொழிவு என நிலவும் இருவேறு காலநிலையால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்க தொடங்கி உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் இலைகள் பழுப்பு நிறத்துக்கு மாறி வருகின்றன. இதன் காரணமாக பச்சை தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோடை மழை பெய்யாததால் மகசூல் குறைந்து வந்தது. தற்போது சிவப்பு சிலந்தி தாக்குதலால் பச்சை தேயிலை மகசூல் அடியோடு பாதித்து விட்டதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து குந்தா பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரிக்க தொடங்கி விட்டது. இந்த நோய் தாக்கிய செடிகளில் பச்சை தேயிலையை பறிக்கும்போது தொழிலாளர்களுக்கும் கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்பு ஏற்படும். மருந்து தெளித்தாலும் நோய் மற்ற செடிகளுக்கு பரவி விடுகிறது. இதற்கு ஒரே தீர்வு கோடை மழை பெய்வது மட்டுமே. மழையை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மழை பெய்தால் மட்டுமே பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கும். மேலும் நோய் தாக்குதலும் முடிவுக்கு வரும். தற்போதைய சூழலில் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளோம். குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story