தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 6 பேர் வேட்புமனு தாக்கல்


தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 6 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 4:00 AM IST (Updated: 26 March 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 6 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தேனி,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏற்கனவே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது உள்பட மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவிடம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராஜாமுகமது (வயது 47) வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு குழுவின் மதுரை மாவட்ட தலைவராக உள்ளார். அதேபோல், மதுரை பாலமேட்டை சேர்ந்த மணிகண்டன் (33), முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த ஜெயமணி (42), குள்ளப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி (45), திருப்பூர் பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த ருத்ரகுமார் (29) ஆகியோரும் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் ஜெயமணி என்பவர் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் போடி சட்டமன்ற தொகுதியிலும், 2014-ம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனியில் ரெயில்வே பாதை அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. இந்த ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள விரும்பிய ஆந்திராவை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் ஒருவர் கமிஷன் கேட்டதால் பணிகள் மந்தமாகி உள்ளது. நான் வெற்றி பெற்றால் 6 மாத காலத்துக்குள் பணிகளை முடித்து ரெயில் இயக்க நடவடிக்கை எடுப்பேன். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. மக்கள் சக்தியை நம்பி தான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் மக்கள் சக்தியை நம்பி இருக்கும் கூட்டணி எங்களுடையது. மற்றொரு புறம் மக்கள் விரோத சக்திகள் இணைந்துள்ளன. சிலர் மக்களை சுரண்டுகின்றனர். நான் நல்லது செய்வேன்.

இலங்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயில்வே பாதை அமைத்துக் கொடுத்துள்ளோம். 1 லட்சம் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். நாங்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல. ஆனால், இவற்றை எல்லாம் மறைக்கப் பார்க்கிறார்கள். நான் புதிய முகம் இல்லை. ஏற்கனவே பழகிய முகம் தான். சமூக நீதிக்காக 100 ஆண்டுகளுக்கும் மேல் உழைத்த குடும்பத்தில் இருந்து வந்தவன். இன்னும் சொல்லப்போனால், சமூக நீதி காத்த தந்தை பெரியாரின் பேரன் நான். சிலர் பிஞ்சில் பழுத்து இருக்கிறார்கள். நான் இயற்கையாக மரத்தில் கனிந்தவன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story