வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்


வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 26 March 2019 4:00 AM IST (Updated: 26 March 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சோமரசம்பேட்டை,

சோமரசம்பேட்டையை அடுத்த குமாரவயலூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா கடந்த 21-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் நாளன்று சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் பால் காவடி, மயில் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். இரவில் சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து 22-ந் தேதி உபய அபிஷேகங்களும், 23-ந் தேதி இரவு வள்ளி நாயகியின் தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், அதன்பின் யானை விரட்டல் காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

நேற்று காலை வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மூர்த்திகளான முருகப்பெருமான், வள்ளி அலங்கரிக்கப்பட்டு மணமேடையில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்ட பின்னர், வள்ளிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் செய்து, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆலோசனையின்படி உதவி ஆணையர் ராணி, நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

Next Story