போளூர் அருகே ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு


போளூர் அருகே ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 March 2019 3:45 AM IST (Updated: 26 March 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

போளூர், 

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலை அறிமுக கூட்டம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.துரை, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வேலாயுதம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கோபிநாதன், த.மா.கா. மாவட்ட தலைவர் தாமோதரன், பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர் மூர்த்தி, அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏ.செல்வன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருவிமலை கே.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெயசுதா வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையை கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி பொறுப்பாளர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட வெற்றி வேட்பாளரான செஞ்சி சேவல் ஏழுமலையை இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா திட்டங்கள் அனைத்தும் முனைப்பாக செயலாற்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நமது வேட்பாளரின் வெற்றிக்கு கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்’ என்றார்.

அதைத் தொடர்ந்து வேட்பாளர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை பேசுகையில், ‘ஜெயலலிதாவை பிரிந்து மீளாத் துயரத்தில் உள்ளோம். அவர், தாய்மார்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா வழியில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். உங்களுக்காக நான் உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் பகாரா பழனி, போளூர் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜல்லிகுமார், ஒன்றிய அவைத்தலைவர் கணேசன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஆறுமுகம், நிலவள வங்கி இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா., தே.மு.தி.க., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம், கோகுல மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

Next Story