வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டது


வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 26 March 2019 4:00 AM IST (Updated: 26 March 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

வேலூர், 

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன், சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் நடக்கிறது.

இந்த தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி நெருங்கியதை தொடர்ந்து அந்தந்த தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது.

கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான எஸ்.ஏ.ராமன் முன்னிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி, வாக்குப்பதிவு எந்திரங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பது முக்கியமானது. வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் 8 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மற்றும் 3-ம் கட்ட பயிற்சியளிக்கப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து புதிய பஸ் நிலையம் அருகில் மாணவ- மாணவிகளை கொண்டு நடத்தப்பட்ட மனித சங்கிலியில் கலெக்டர் கலந்துகொண்டு மாணவிகளுடன் சிறிது நேரம் கைகோர்த்து நின்றார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி கலெக்டர் மெகராஜ், தேர்தல் தாசில்தார் (பொறுப்பு) விஜயக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story