திருக்கோவிலூர் அருகே பரிதாபம், மின்வேலியில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி - நில உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு


திருக்கோவிலூர் அருகே பரிதாபம், மின்வேலியில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி - நில உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 March 2019 4:15 AM IST (Updated: 26 March 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக நில உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர், 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சத்தியகண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் செந்தமிழ்ச்செல்வன்(வயது 16). இவர் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் செந்தமிழ்ச்செல்வனை, அவரது நண்பரான அதேஊரை சேர்ந்த திருவேங்கடம் மகன் சத்தியராஜ்(25) என்பவர் தனது வயலுக்கு போகலாம் என்று அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வயலில் சாகுபடி செய்திருந்த பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் செந்தமிழ்ச்செல்வன் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்வேலியில் சிக்கி பலியான செந்தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்ததாக நில உரிமையாளர் திருவேங்கடம், அவரது மகன் சத்தியராஜ், ராஜசேகர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story