சிறுவன் கொலைக்கு பழிதீர்ப்பு கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை 5 பேர் கைது
16 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிதீர்க்கும் விதமாக கவுன்சிலரின் கணவர் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
பீட், பார்லி- வய்ஜ்நாத் பகுதியில் உள்ள புலே நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங் கெய்க்வாட்(வயது50). இவரது மனைவி கவுன்சிலர் ஆவார். நேற்று பாண்டுரங் கெய்க்வாட்டை சுற்றிவளைத்த 2 பெண்கள் உள்பட 11 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடியது.
இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 16 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
அந்த 16 வயது சிறுவன் வேறு சமுதாய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் பெண்ணின் சமுதாயத்தினர் சம்பந்தப்பட்ட சிறுவனை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடத்தினர். பின்னர் அந்த சிறுவன் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டான்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாண்டுரங் கெய்க்வாட் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் கும்பல் அவரை தாக்கி கொலை செய்துள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலில் உயிரிழந்த சிறுவனின் தாயும் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story