நவிமும்பையில் குடோனில் பதுக்கப்பட்ட ரூ.70 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேரிடம் விசாரணை
நவிமும்பையில் குடோனில் பதுக்கப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் நவிமும்பை துர்பே எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகளவில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த குடோனில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அங்கு மதுபாட்டில்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்கிருந்த மொத்தம் 6 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.70 லட்சம் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக குடோனில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அந்த மதுபாட்டில்களை வைத்திருந்ததற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளை சேர்ந்த தொண்டர்களுக்கு வினியோகம் செய்ய அந்த மதுபாட்டில்களை வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story