எர்ணாவூரில் சாலையை வழிமறித்து நின்ற கன்டெய்னர் லாரி போக்குவரத்து பாதிப்பு


எர்ணாவூரில் சாலையை வழிமறித்து நின்ற கன்டெய்னர் லாரி போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 March 2019 10:45 PM GMT (Updated: 26 March 2019 5:19 PM GMT)

எர்ணாவூரில் கன்டெய்னர் லாரி சாலையின் குறுக்கே வழிமறித்து நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மணலிபுதுநகர், மாதவரம் போன்ற பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் முனையங்கள் உள்ளன. இங்கு இருந்து வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் செல்ல வேண்டிய பொருட்கள் கன்டெய்னரில் அடைக்கப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர், லாரிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது.

இந்த கன்டெய்னரை ஏற்றி செல்லும் லாரிகள் பொன்னேரி நெடுஞ்சாலை மணலி சாலை மற்றும் எண்ணூர் விரைவுசாலை வழியாக செல்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை எர்ணாவூர் மேம்பாலம் அருகே துறைமுகத்துக்கு ஓட்டிச் சென்ற கன்டெய்னர் லாரியை திருப்ப முயன்றபோது, சாலையில் பள்ளங்கள் இருந்ததால் திருப்ப முடியாமல் சாலையின் நடுவே சிக்கிக்கொண்டது.

டிரைவர் முயற்சி செய்து பார்த்தும் முடியாததால் லாரி சாலையை வழிமறித்து நின்றுவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணூருக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள், கார், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தன.

இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதியடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் சாலை நடுவில் சிக்கிய கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story