கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணம் - அ.தி.மு.க.-கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(புதன்கிழமை) சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கடலூர்,
தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று(புதன்கிழமை) கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
இன்று(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 9-30 மணி வரை சங்கராபுரத்திலும், காலை 10 மணி முதல் 10-30 மணி வரை கள்ளக்குறிச்சியிலும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் காலை 11-30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், விழுப்புரத்தில் மாலை 4 மணி முதல் 4-30 மணி வரையும் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் அவர் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து, கடலூர் ரெட்டிச்சாவடியில் இன்று மாலை 6-20 மணி முதல் 6-40 மணி வரையும், கடலூர் உழவர்சந்தையில் இரவு 7 மணி முதல் 7-20 மணி வரையும், பரங்கிப்பேட்டையில் இரவு 8 மணி முதல் 8-30 மணி வரையும் பிரசாரம் செய்கிறார்.
இதன் பிறகு சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து புவனகிரியில் இரவு 8-45 மணி முதல் 9 மணி வரையும், சிதம்பரத்தில் இரவு 9-15 மணி முதல் 9-30 மணி வரையும் பிரசாரம் செய்கிறார்.
இதன்பிறகு வைத்தீஸ்வரன் கோவிலில் இரவு தங்கிவிட்டு நாளை(வியாழக்கிழமை) செம்பனார்கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி குத்தாலம், பேரளம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டி விட்டு திருச்சியில் இரவில் தங்குகிறார்.
Related Tags :
Next Story