100 சதவீதம் வாக்குப்பதிவு, 10 ஆயிரம் வீடுகளுக்கு கலெக்டர் கடிதம் - தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது


100 சதவீதம் வாக்குப்பதிவு, 10 ஆயிரம் வீடுகளுக்கு கலெக்டர் கடிதம் - தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-26T23:27:43+05:30)

100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகளுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ், தபால் துறை மூலம் கடிதம் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளார்.

தேனி,

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்திட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 10 ஆயிரம் வீடுகளுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கடிதத்தை கலெக்டர் அனுப்பி வைக்க உள்ளார். கலெக்டர் கையொப்பமிட்ட கடிதம் தபால் துறை மூலம் பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று வழங்கப்பட உள்ளது.

இதற்காக கலெக்டர் ஒரு விழிப்புணர்வு கடிதத்தை தயார் செய்து உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம். தேர்தல் - மாபெரும் ஜனநாயகத் திருவிழா. ஏப்ரல் மாதம் 18-ந்தேதியன்று நடக்கும் மக்களின் திருவிழா. ஜனநாயகத்தின் உண்மையான திறவுகோல்! இதோ உங்களின் விரல் நுனியில். ஆம்! விரல் நுனியில் விழிப்புணர்வு. ஏப்ரல் 18-ந்தேதியன்று அரை மணிநேரம் ஒதுக்குங்கள். வாக்களிக்கும் அடிப்படை கடமையை நிறைவேற்றுங்கள்.

வாக்கு என்பது சமுதாயத்துக்கு நாம் செலுத்தும் மரியாதை என நினையுங்கள். வாக்கை தயக்கமின்றி பதிவு செய்யுங்கள். வாக்களித்தோம் என்பதில் பெருமை கொள்ளுங்கள். நேர்மையான வாக்குப்பதிவு, 100 சதவீத வாக்குப்பதிவினை நிறைவேற்றும் வகையில் அனைவரும் வாக்கினை செலுத்துங்கள். தேனி மாவட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் பெருமை சேருங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story