“மத்தியில் தமிழர்கள் நலனுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது” கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


“மத்தியில் தமிழர்கள் நலனுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது” கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 March 2019 4:00 AM IST (Updated: 27 March 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

“மத்தியில் தமிழர்கள் நலனுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது” என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி, 

“மத்தியில் தமிழர்கள் நலனுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது” என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.

பிரசாரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று சாயர்புரத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாயர்புரம் பஜாரில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தமிழர்களின் நலன்களுக்கு எதிரான, நம் அடையாளங்களை வீணாக்கக்கூடிய ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. நாம் அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 ஆட்சியையும் மாற்றி காண்பிக்க வேண்டும். அப்போது தான் இந்த நாடு பொருளாதார வளம் பெற முடியும். இந்த நாடு மதநல்லிணக்கம் உள்ள நாடாக அத்தனை பேரும் ஒற்றுமையாக வாழும் சூழலை உருவாக்க முடியும்.

பாதுகாப்பு இல்லை

நாட்டின் பிரதமர் தனது விளம்பரத்துக்காக மட்டும் ரூ.4 ஆயிரத்து 500 கோடி செலவு செய்து உள்ளார். இதுபோன்ற பிரதமரை வேறு எங்கும் பார்க்க முடியாது. விவசாயிகளுக்கு பயிர் இழப்புக்கு நிவாரணம் வருவது இல்லை. வெள்ள நிவாரணம் வருவது இல்லை. மக்கள் பாதிக்கப்பட்டால் நிவாரணம் கிடைப்பது இல்லை.

நாட்டில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். உங்கள் உரிமைக்கு தோள் கொடுக்கும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. முள்ளன்விளை, பட்டாண்டி விளை, சுப்பிரமணியபுரம் நடுவக்குறிச்சி, நந்தகோபாலபுரம், சிவத்தையாபுரம், வாழவல்லான், ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஜெயத்துரை, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story